எப்பொழுதும் தட்டையான பின் பகுதியைக் கொண்டதும், கடினமான அமரும் பகுதியைக் கொண்டதுமான இருக்கைகளில் அமர்ந்து கற்க. சோபா, மெத்தை போன்ற மென்மையான மற்றும் ஒப்பமான மேற்பரப்புகளின் மீது அமர்ந்து கற்பதை தவிர்ந்துகொள்க.
எப்பொழுதும் உமது கற்கும் அறையை வெளிச்சமாக வைத்துக் கொள்க. முடிந்தளவு உமது அறையிலுள்ள எல்லா மின் குமிழ்களையும் ஒளிரச் செய்க. குறைந்த வெளிச்சத்தில் கற்பதைத் தவிர்ந்துகொள்க.
மின் விசிறியை உமது முகத்துக்கு நேரே காற்றாடிக்கும் விதமாக வைக்க வேண்டாம்.
கற்பதற்கு முன்னர் அதிகளவு உணவு உட்கொள்வதையும், சோறு உண்பதையும் தவிர்ந்துகொள்க.
உமது கற்கும் மேசையை எப்பொழுதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்க. என்ன பாடத்தைக் கற்கவிருக்கிறீர்களோ அந்தப் பாடத்திற்குரிய புத்தகங்களை மாத்திரம் உமது கற்கும் மேசையில் வைத்தால் போதும். ஏனைய புத்தகங்களை புத்தக அடுக்கொன்றில் இட்டு வைக்கலாம். உமது கற்கும் மேசையில் எல்லா புத்தகங்களையும் இட்டு வைக்க வேண்டாம்.
தொடர்ச்சியாக கற்பதைத் தவிர்ந்துகொள்க! 30 தொடக்கம் 45 நிமிட கற்றலின் பின்னர் 5 தொடக்கம் 10 நிமிட ஓய்வொன்றை எடுக்க.
ஒரே பாடத்தை தொடர்ச்சியாகக் ஒன்றரை மணி நேரத்திற்கு கூடுதலாகக் கற்க வேண்டாம். எல்லா பாடங்களையும் ஒரு சுழற்சி அடிப்படையில் கற்கும் விதமாக நேர அட்டவணை ஒன்றை வகுத்துக் கொள்க. ஒரு பாடத்தைக் கற்கும் போது அலுப்படிப்பது போல் இருந்தால் அப்பாடத்தை நிறுத்தி விட்டு வேறு பாடத்தைக் கற்க.
உமது உடற் சக்தியின் அளவு உச்ச கட்டத்தில் இருக்கும் நேரத்தில் கடினமான தலைப்புகளையும்,பாடங்களையும் கற்க. (இந்த நேரம் உமது மூளை கடினமான விடயங்களையும் வாசிக்கக் கூடிய இதமான வேளையாக இருத்தல் வேண்டும், இது அதிகாலை, பகல் பொழுது, அந்தி மாலை போன்ற எப்பொழுதாயும் இருக்கலாம்)
சாத்தியமாயின் குழு முறையில் கற்க. ஆனால் அக்குழு அதி குறைந்தது 3 பேரையும், அதி கூடியது 5 பேரையும் மாத்திரம் கொண்டதாய் இருப்பதை உறுதி செய்க.
சுத்தமான நீரை பருகுக. அது எப்பொழுதும் உங்களை இதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
எப்பொழுதும் உமது சொந்த பாணியில் கற்க. மற்றவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். எனினும் உமது சொந்த பாணியில் கற்பது கடினமாயிருப்பின் அதை மாற்றுக.
உமது கற்கும் அறைக்குள் நடந்து கொண்டு கற்க முயற்சி செய்க! நடந்து கொண்டு கற்பது தூக்கத்தை விட்டும் உம்மை தூரமாக்கும்.
சத்தமிட்டு வாசிக்க முயற்சி செய்க. மனதுக்குள் வாசிப்பாதானது தூக்கத்தை விரைவாக ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
எழுதுவதன் மூலம் நியாபகம் வைத்துக் கொள்ள முயற்சி செய்க. அத்தோடு சிறுகுறிப்புகள் எழுதவும் முயற்சி செய்க. எழுதுவதானது உங்களைத் தூக்கத்தை விட்டும் தூரமாக்கும்.
இவை எல்லாவற்றையும் முயன்ற பின்பும் தூக்கம் வருமாயின், ஒரு குட்டி தூக்கம் போடுக. ஆனால் அத்தூக்கம் 60 நிமிடங்களை தாண்டி விடாமல் பார்த்துக் கொள்க. தாண்டி விட்டால் கற்பதற்காய் உமக்கிருக்கும் அதி முக்கியமான நேரம் விராயமாகி முடிந்து விடும்.