01. நம்பிக்கை கொள்க.
பரீட்சைக்கான பாடப்பரப்பில் எவ்வளவை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கிறோம் எனும் விடயம் பரீட்சார்த்திகள் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே பூர்த்தி செய்த பாடப்பரப்பினுள் என்ன கேள்விகள் வந்த போதிலும், தன்னால் அவற்றை முழுமையாகச் செய்ய முடியும் எனும் நம்பிக்கையுடன் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு செல்லுதல் வேண்டும். இதனால் பரீட்சையை இலகுவாக எதிர்கொள்வதற்கான மனோ வலிமை பரீட்சார்த்திகளுக்கு ஏற்படும். அத்தோடு பரீட்சை மண்டபத்தில் நேரம் பிரயோசனமாய் கழிக்கப்படும்.02. உணர்ந்து கொள்க.
பரீட்சைக்கான பாடப்பரப்பில் எவ்வெப் பகுதிகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை எனும் விடயமும் பரீட்சார்த்திகள் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே பூர்த்தி செய்யாத பாடப்பரப்பிலிருந்து வினாக்கள் தொடுக்கப்படுகிற போது, தன்னால் அவற்றை முழுமையாகச் செய்ய முடியாது போகலாம் எனும் விடயத்தையும் பரீட்சார்த்திகள் நன்கு உணர்ந்து பரீட்சைக்குச் செல்லுதல் வேண்டும். இதனால் தேவையற்ற வினாக்களில் நேரத்தை வீணடிப்பதை தவிர்ந்து கொள்ளலாம்.03. முன்னாயத்தங்கள்.
பரீட்சைக்குத் தேவையான சகல உபரணங்களையும் பரீட்சைக்கு முதல் தினமே ஒழுங்கு செய்து வைத்துவிடல் வேண்டும். எழுதுகருவிகள் பரீட்சையின் இடைநடுவே தீர்ந்துவிடும் வாய்ப்புகள் உள்ளதால், மேலதிக எழுதுக்கருவிகளை தயார்செய்து வைப்பது பயனளிக்கும். அத்தோடு அணிந்து செல்லும் ஆடைகள் மற்றும் பாதணிகளையும் முதல் தினமே ஒழுங்கு செய்வதன் மூலம் பரீட்சை தினத்தில் ஏற்படும் தேவையற்ற மன உளைச்சல்களிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.04. தூக்கத்தைக் கெடுப்பதைத் தவிர்க்க.
பரீட்சைக்கு முதல் தின இரவில் வழமை போன்று குறைந்தது 6 மணி நேரமேனும் நித்திரை கொள்வது அவசியமாகும். பரீட்சைப் பயம் காரணமாக தூக்கத்தைக் கெடுத்துக் கொள்வதானது, பரீட்சை மண்டபத்தில் மன அழுத்தத்தையும், உடல் உபாதையையும் ஏற்படுத்தும். சிலவேளைகளில் உரிய நேரத்திற்கு பரீட்சை மண்டபத்திற்கு செல்ல முடியாது போவதற்கும் இது காரணமாய் அமைந்து விடலாம்.